Sunday, June 11, 2017

S M சுப்பையா நாயுடு

#தமிழ்த்_திரை_இசையின்_பிதா_மகர்கள்# - 2. S M சுப்பையா நாயுடு.

முதல் முதலில் பின்னணியில் பாடுவதை தமிழ்த் திரையில் அறிமுகப்படுத்தியவர், டி எம் எஸ் பாடிய முதல் திரைப்பாடலுக்கு இசையமைத்தவர், எம் ஜி ஆரின் முதல் கொள்கைப்பாடலுக்கு இசையமைத்தவர், கண்ணதாசனின் முதல் பாடலுக்கு இசையமைத்தவர், எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்த முதல் பாடலை திரையில் ஒலிக்க செய்தவர் - இத்தனை சிறப்புகளையும் ஒருங்கே அமையப் பெற்றயவர் - தென்னிந்திய திரை இசை உலகில் "சங்கீதையா" என்று அன்புடன் அழைக்கப்பட்ட திரு எஸ் எம சுப்பையா நாயுடு. 

காவல்துறையில் இருந்த தந்தையின் கண்டிப்பு பொறுக்காமல் வீட்டை விட்டு ஓடி வந்தவர் திரு எஸ் எம் எஸ். சிங்கப்பூர் சென்று பிழைக்க எண்ணி நாகப்பட்டினம் வந்தார், கப்பலேற. உடனடியாக செல்ல இயலவில்லை. இன்னும் சில நாட்கள் ஆகும்போலிருந்ததால் தஞ்சாவூருக்கு சென்றார். அங்கு ஜெகந்நாத ஐயர் நடத்தி வந்த நாடகக் கம்பெனியில் சேர்ந்து சிறு சிறு வேடங்களில் நடிக்கத் துவங்கினார். அவர் நடித்த கபீர்தாஸ் நாடகத்தில் கபீர்தாஸாக நடித்தவர் பின்னாளில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் திரு எஸ் வி வெங்கட்ராமன்.

நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை ஜகந்நாத ஐயரிடமிருந்து பிரிந்து தனியாக நாடகக் குழு துவங்கியபோது அவரிடம் சேர்ந்து ஹார்மோனியம் பயின்றார். அப்போது பிரதான ஹார்மோனியக் கலைஞராக இருந்த ராஜகோபால் அய்யங்கார் நோய்வாய்ப்பட்டு சொந்த ஊருக்கு சென்றுவிடவே அங்கு நாடகங்களுக்கு ஹார்மோனியம் வாசிக்கத் துவங்கினார். பிறகு நவாப் நடித்த பக்த ராமதாஸ் திரைப்படமாக வந்தபோது அதில் ஹார்மோனியம் வாசித்தார். பிறகு பல படங்களில் ஹார்மோனியக் கலைஞராக பணியாற்றினார். அப்போது இசையமைப்பாளர் என்ற பொறுப்பு எவருக்கும் அளிக்கப்படவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் படிப்படியாக முன்னேறி இசையமைப்பாளரானார்.

முதல் முதலில் பின்னணியில் பாடுவதை தமிழ்த் திரையில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். ராஜகுமாரி என்ற படத்தில் M N நம்பியாருக்காக திருச்சி லோகநாதன் பாடிய காசினி மேல் நாங்கள் என்ற பாடல்.

இவரது இசையில்தான் கவியரசு கண்ணதாசன் எழுதிய முதல் பாடலான கலங்காதிரு மனமே என்ற பாடல் 1949ல் வெளியான கன்னியின் காதலி என்ற படத்தில் K V ஜானகி பாடியது.

ஜூபிடரின் அபிமன்யு படத்திற்கு ஒரு பாடல் காட்சிக்கான மெட்டு சரியாக அமையவில்லை. தனது உதவியாளனாக இருந்த ஒரு இளைஞன் போட்ட மேட்டை கேட்ட எஸ் எம் எஸ் அதையே பயன்படுத்திக் கொண்டார். அந்த பாடல் புது வசந்தமாமே வாழ்விலே என்ற பாடல். யூ ஆர் ஜீவரத்தினம், திருச்சி லோகநாதன் பாடிய பாடல். பின்னாளில் ஜூபிடர் நிறுவனம் கோவையிலிருந்து சென்னைக்கு மாறியபோது தனது உதவியாளன்தான் அந்தப் பாடலுக்கு இசையமைத்தாகவும் அவனையும் சென்னைக்கு அழைத்து சென்று விடும்படியும் வேண்டிக் கொண்டார் எஸ் எம் எஸ். அந்த உதவியாளன்தான் மெல்லிசை மன்னர் திரு எம் எஸ் விஸ்வநாதன்.

எம் ஜி யாருக்காக மலைக்கள்ளன் படத்தில் இவர் இசையமைத்த "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்" என்ற பாடல் பெரும்புகழ் பெற்றது. இப்பாடல் எம் ஜி ஆருக்கு திரையுலகில் ஒரு பெரிய திருப்புமுனையைத் தந்தது என்றால் மிகையாகாது.

கண்டசாலா, M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி, G K வெங்கடேஷ், சூலமங்கலம் ராஜலக்ஷ்மி போன்றோர் இவரிடம் உதவியாளர்களாக இருந்தது குறிப்பிடத் தக்கது
Image may contain: 1 person

இவர் ஒரு சிறந்த இசை அமைப்பாளர் மட்டுமல்ல, ஒரு சிறந்த MUSIC CONDUCTORம் கூட. இவரது மெட்டுக்கள் அனைத்தும் உடனடி HITS ஆக விளங்கின. J P சந்திரபாபுவை குங்குமப்பூவே பாடலின் மூலம் ஒரு சிறந்த பாடகராக உருவாக்கினார். இவரது இசையமைப்பை ஒரு சிலர் எல்லி நகையாடியபோதும் மனம் தளராது தன் கடமையை செய்து வந்தார். அவர்களுக்கு பதில் கூறும் வகையில் இவர் இசையமைத்த பாடல்தான் எஸ் ஜானகி பாடிய சிங்கார வேலனே தேவா பாடல். பெரும் புகழ் பெற்ற பாடல். இன்றும் ஜானகி அவர்கள் இந்தப் பாடலைத்தான் தனது தலைசிறந்த பாடலாக குறிப்பிடுகிறார். 

இவரது இசையில் பாடிய பாடக நடிகர்கள்:

P U சின்னப்பா, C ஹொன்னப்ப பாகவதர், N C வசந்தகோகிலம், U R ஜீவரத்தினம், T R ராஜகுமாரி, K R ராமசாமி, சித்தூர் V நாகைய்யா, N S கிருஷ்ணன், T A மதுரம், P பானுமதி, S வரலக்ஷ்மி, J P சந்திரபாபு ஆகியோர்.

இவரது இசையில் பாடிய பிரபல பாடகர்கள்:

C S ஜெயராமன்,T M சௌந்தரராஜன், கண்டசாலா,A M ராஜா, சீர்காழி கோவிந்தரராஜன், திருச்சி லோகநாதன், V N சுந்தரம், T A மோதி, P B ஸ்ரீனிவாஸ், S C கிருஷ்ணன், A L ராகவன், M L வசந்த குமாரி, P A பெரியநாயகி, P லீலா, ஜிக்கி, T V ரத்தினம், A P கோமளா , ராதா ஜெயலக்ஷ்மி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, ஜமுனா ராணி, P சுசீலா, K V ஜானகி, S ஜானகி,, L R ஈஸ்வரி போன்றோர்.

இவரது சில பிரபல பாடல்கள்:

திருடாதே பாப்பா திருடாதே - திருடாதே.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - மலைக்கள்ளன்,
தூங்காதே தம்பி தூங்காதே - நாடோடி மன்னன்,
சிங்கார வேலனே தேவா - கொஞ்சும் சலங்கை,
நீ எங்கே என் நினைவுகள் அங்கே - மன்னிப்பு,
மாலை மயங்குகிற நேரம், பச்சை மலை அருவியோரம் - மரகதம்,
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை - அன்னையின் ஆணை,
எத்தனை செல்வங்கள் வந்தாலுமே - தாயின் மடியில்,
கண்ணில் வந்து மின்னல் போல் - நாடோடி மன்னன், 
காசேதான் கடவுளப்பா - சக்கரம்.ஆகிய சில.

இவர் இசையமைத்த படங்கள் சில:

மனோன்மணி, ஸ்ரீ முருகன், வால்மீகி, ராஜகுமாரி, அபிமன்யு, கன்னியின் காதலி, வேலைக்காரி, ஏழை படும் பாடு, திகம்பர சாமியார், மர்மயோகி, மலைக்கள்ளன், வாழ்விலே ஒரு நாள், நாடோடி மன்னன், அன்னையின் ஆணை, திருமணம், மரகதம், அதிசயப் பெண், திருடாதே, கொஞ்சும் சலங்கை, கல்யாணியின் கணவன், தாயின் மடியில், ஆசை முகம், நாம் மூவர், நாலும் தெரிந்தவன், பணக்காரப் பிள்ளை, ஐந்து லட்சம், மன்னிப்பு, தலைவன், இலங்கேஸ்வரன் போன்றவை.

No comments:

Post a Comment

குன்னக்குடி வைத்தியநாதன்.

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 16 : குன்னக்குடி வைத்தியநாதன். குன்னக்குடி வைத்யநாதனைப் பற்றி கூற வேண்டுமெனில்; "யாரையும் எ...