Sunday, July 16, 2017

டி ஜி லிங்கப்பா

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் – 9. டி ஜி லிங்கப்பா

டி ஜி லிங்கப்பா, 1927 ஆகஸ்ட் 22 அன்று பிறந்தவர். திருச்சியை சேர்ந்தவர்.இவரது தந்தை திரு கோவிந்தராஜுலு நாயுடு ஒரு சங்கீத வித்வான்.அவரது வீட்டிற்கு பாட வரும் எம் கே தியாகராஜ பாகவதரை தனது பிள்ளைகளுக்கு கோவிந்தராஜுலு நாயுடு அறிமுகம் செய்து வைத்தார். நாடகங்களில் ஹார்மோனியம் வாசித்து வந்த அவர், திருமதி கே பி சுந்தராம்பாள் அவர்களின் குருவும் ஆவார்.

1940ல் அவர்களது குடும்பம் சென்னைக்கு குடி பெயர்ந்தது. 14 வயதில் லிங்கப்பா, காமதேனு என்ற திரைப்படத்தில் நடிக்க அதன் தயாரிப்பாளரான விஸ்வநாதன் என்பவரை அணுகினார்.அதற்கு அவர் அந்தப் படத்தில் பாடும்படும்படியும்,தன் கூடவே இருக்கும்படியும் கூறி விட்டார்.இதில் ஏதும் பலனில்லாமல் போகவே சிறிது காலம் கழித்து அவரிடமிருந்து வெளியேறி மயூரா ஆர்கெஸ்ட்ரா என்ற திரைப்படங்களுக்கு வாசிக்கும் இசைக்குழுவில், ஹார்மோனியம்,மாண்டலின் கிடார் ஆகியவை வாசித்து வந்தார். இவர் அசோக் குமார் என்ற படத்தில் வாத்தியக் கலைஞராக பணிபுரிந்துள்ளார்.

அதே வருடம், லிங்கப்பா ஜெமினி ஸ்டுடியோவை வாய்ப்புக்காக அணுகினார். அப்போது சி ராமச்சந்திரா அங்கு இருந்தார். ஆனால் லிங்கப்பா வயதில் மிகவும் இளையவராக இருந்ததால் நிராகரிக்கப்பட்டார். பிறகு சேலம் சென்று மாடர்ன் தியேட்டர்ஸில் வாய்ப்பு தேடினார். அங்குதான் அவர் கே வி மகாதேவன், டி ஆர் பாப்பா போன்றோரை சந்தித்தார்.

1947ல் காரைக்குடி சென்று நாம் இருவர் படத்திற்கு வாசித்தார். பின்னர் 1948 ல் சென்னை திரும்பி சி ஆர் சுப்பராமன் அவர்களிடம் உதவியாளராக பணி புரிந்தார். இவ்வாறு பலதரப்பட்ட இசையமைப்பாளர்களுடன் பணி புரிந்த அனுபவும் இவருக்கு ஃப்ரீலேன்ஸ் இசையமைப்பாளராக பணிபுரியும் எண்ணத்தை அளித்தது. இவர் லண்டன் சென்று நவீன இசைக்கருவிகளை வாங்கி வருவார். அவ்வாறு வாங்கி வந்த எலெக்ட்ரிக் கிடாரை இவர் ஜி ராமநாதன், எஸ் வி வெங்கட்ராமன், கே வி மகாதேவன் போன்றோரின் இசையில் வாசித்துள்ளார்.

டி ஆர் மகாலிங்கம் தனது சொந்தத் தயாரிப்பில் மச்சரேகை என்ற படம் தயாரித்தார். இதன் இசையமைப்பாளர் திரு சி ஆர் சுப்பராமன். இவர் திடீரென்று இறந்து விடவே, தனது இரண்டாம் படமான மோகனசுந்தரம் என்ற படத்தில் டி ஜி லிங்கப்பாவை அறிமுகப் படுத்தினார். இருவருக்கும் நாம் இருவர் படத்திலிருந்தே நெருக்கமானநட்பு இருந்து வந்தது. இப்படத்தில் 10 பாடல்கள் இடம்பெற்றன. இப்படத்தில்தான் சந்திரபாபு முதலில் "ஹலோ மை டியர் டார்லிங், ஹலோ மை ரோஸ் சார்மிங்" என்ற பாடலைப் பாடினார். இப்படம் வெளி வரவில்லை. டி ஆர் மகாலிங்கமும், லிங்கப்பாவும் ஆழ்ந்த கர்நாடக இசையறிவு கொண்டிருந்ததால் ஒருவரை ஒருவர் அனுசரித்து, இசையைப் பற்றி கலந்துரையாடி பாடல்களை அமைத்தனர். தனது அடுத்த இரண்டு படங்களான, சின்னதுரை, விளையாட்டு பொம்மை ஆகிய படங்களுக்கும் மகாலிங்கம் இவருக்கே வாய்ப்பளித்தார்.

பி ஆர் பந்துலு டி ஆர் மகாலிங்கத்திடம் உதவியாளராக இருந்தார். அவரிடமிருந்து பிரிந்து சென்று அவர் தனது முதல் படமான கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி தயாரித்தபோது திரு டி ஜி லிங்கப்பாவையே இசையமைப்பாளராக நியமித்தார். ப நீலகண்டன் இயக்கத்தில் உருவான இப்படத்தில், "வெண்ணிலாவும் வானும் போலே" என்ற பாராதிதாசன் பாடல் இடம் பெற்றது. இந்தப் பாடலுக்கு முதலில் இசை வடிவம் அளித்தவர் திரு எம் எம் தண்டபாணி தேசிகர். அவரிடம் லிங்கப்பா அவர்கள் அனுமதி பெற்று, பிறகு திரு பாரதிதாசனிடமும் இப்பாடலை போட்டுக் காட்டி அவர் ஒப்புதல் அளித்த பின்னரே, சிறு மாற்றங்களுடன் இப்படத்தில் சேர்த்தார். இப்படத்தில் சிவாஜி கணேசனுக்காக "ஜாலி லைஃப், ஜாலி லைஃப்" என்ற பாடலை சந்திரபாபு பாடியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெற்றியடையவே, பந்துலு லிங்கப்பாவை தனது அடுத்த படமான முதல் தேதிக்கும் இசையமைப்பாளராக நியமித்தார் 
Image may contain: 1 person

அடுத்து இவருக்கு பெர்யர் வாங்கித் தந்த படம் "தங்கமலை ரகசியம்". இப்படத்தில் வரும் "அமுதைப் பொழியும் நிலவே" பாடல் பி சுசீலா அவர்களை புகழின் உச்சிக்கே கொண்டு ,சென்றது. இதன் ஹிந்தி மொழியாக்கத்திலும் இப்பாடலுக்கு இதே மெட்டு பயன்படுத்தப்பட்டு, ஹிந்தி திரையுலகில் பெரும்பெயர் பெற்றது.

லிங்கப்பா தொடர்ந்து, சபாஷ் மீனா, எங்கள் குடும்பம் பெருசு, குழந்தைகள் கண்ட குடியரசு ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். பின்னர் கன்னடப் படங்களுக்கு இசையமைக்க சென்று விட்டார். மறுபடியும் 1964ல் பி ஆர் பந்துலு இவரை முரடன் முத்து படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பளித்தார். (இதுதான் சிவாஜி-பந்துலு இணைந்து பணிபுரிந்த கடைசி படம். எதற்காகப் பிரிந்தார்கள் என்று தெரியவில்லை. முரடன் முத்து நவராத்திரி - எது 100 ஆவது படம் என்ற பிரச்சினையினாலா?) அடுத்து இவர் தாயின் மேல் ஆணை (1966), தங்கமலர் (1969), கடவுள் மாமா (1974) ஆகிய தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். கடவுள் மாமா படம்தான் இவர் கடைசியாக பணியாற்றிய தமிழ்ப் படம்.

இவரது இசையில் பாடிய பாடகர்-நடிகர்கள்:
எம் எம் தண்டபாணி தேசிகர், டி ஆர் மகாலிங்கம், கே ஆர் ராமசாமி, யூ ஆர் ஜீவரத்தினம், என் எஸ் கிருஷ்ணன், டி ஏ மதுரம், ஜே பி சந்திரபாபு போன்றோர்.

இவரது இசையில் பாடிய பின்னணிப் பாடகர்கள்:
டி எம் சௌந்தரராஜன், ஏ எம் ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், வி என் சுந்தரம், எஸ் சி கிருஷ்ணன், எம் எல் வசந்தகுமாரி, பி லீலா, ஜிக்கி, டி வி ரத்தினம், ஏ பி கோமளா, ராதா ஜெயலக்ஷ்மி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, கே ஜமுனாராணி, பி சுசீலா, கே ராணி, எஸ் ஜானகி போன்றோர்.

இவரது இசையமைப்பில் சில பிரபல பாடல்கள்:
ஓ, ஜெகமத்தில் இன்பம் - மோகனசுந்தரம் (டி ஆர் மகாலிங்கம் , எஸ் வரலக்ஷ்மி)
பாட்டு வேணுமா - மோகனசுந்தரம் (டி ஆர் மகாலிங்கம்)
அமுதைப் பொழியும் நிலவே - தங்கமலை ரகசியம் (பி சுசீலா)
தென்றலே வாராயோ, இன்ப சுகம் தாராயோ- வாழ்விலே ஒரு நாள் (டி எம் சௌந்தரராஜன், யூ ஆர் ஜீவரத்தினம்)
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் - முதல் தேதி (என் எஸ் கிருஷ்ணன்)
வெண்ணிலாவும் வானும் போலே - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி (ராதா ஜெயலக்ஷ்மி)
அதிமதுரா அனுராகா - எங்கள் குடும்பம் பெருசு (ஏ எம் ராஜா, கே ஜமுனாராணி)
ராதா மாதவ வினோத ராதா - எங்கள் குடும்பம் பெருசு (டி எம் சௌந்தரராஜன், பி சுசீலா)
சித்திரம் பேசுதடி - சபாஷ் மீனா (TMS, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இருவர் குரலிலும்)
கானா இன்பம் கனிந்ததேனோ - சபாஷ் மீனா (டி ஏ மோதி - பி சுசீலா)
என் அருமை காதலிக்கு வெண்ணிலாவே - எல்லோரும் இந்நாட்டு மன்னர் (TMS)

குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே என்ற பாடலை இவர் இசையமைக்க சந்திரபாபு இவரிடம் அதைக் கற்றுக் கொண்டு பிறகு மரகதம் படத்தில் பாடியதாகவும், புத்தம்புது மேனி என்ற பால முரளி கிருஷ்ணா - பி சுசீலா பாடலும் இவர் இசையமைப்பில் உருவாகி பின்னர் சுபதினம் படத்தில் இடம் பெற்றதாகவும் கூறுவார்கள்.

இவர் 5 ஃபிப்ரவரி 2000, அன்று இயற்கை எய்தினார்.

குறைந்த அளவே தமிழ்ப் படங்களுக்கு இவர் இசையமைத்திருந்தாலும் அத்தனையும் நன்முத்துக்கள்.

No comments:

Post a Comment

குன்னக்குடி வைத்தியநாதன்.

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 16 : குன்னக்குடி வைத்தியநாதன். குன்னக்குடி வைத்யநாதனைப் பற்றி கூற வேண்டுமெனில்; "யாரையும் எ...