Monday, August 14, 2017

ஆர் கோவர்த்தனம்.

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 13: ஆர் கோவர்த்தனம். 

சுதர்சனம் மாஸ்டரின் தம்பி. அபார ஸ்வர ஞானம் உடையவர். இவரது பாடல்கள் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல். குறிஞ்சிப் பூ போன்று அரிதாக இசை அமைத்தவர், ஆனால் அத்தனையும் ரத்தினங்கள்.

தியாகராஜ பாகவதர் நடித்த திருநீலகண்டரின் பாடல்களை கிராமபோனுக்காக, சர்மா சகோதரர்கள் "மயூரா ஃபிலிம் ஆர்கெஸ்டிரா" மூலம் பதிவு செய்து கொண்டிருந்தார்கள். பாகவதரே மீண்டும் பாடிக் கொண்டிருந்தார். இதை அந்த இசைக்குழுவில் ஹார்மோனியம் வாசிக்கும் ஒருவரின் 10 வயது தம்பி உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான். மதிய உணவு வேளையில் பியானோவின் கட்டைகளை ஒரே கையால் இயக்கி பாகவதர் பாடிய "உன் அழகைக் காண இரு கண்கள் போதாதே" என்ற பாடலை வாசித்தான். அதைக் கேட்ட சர்மா "எங்கே இதன் ஸ்வரங்களை சொல் பார்க்கலாம்" என்றவுடன் அந்த சிறுவன் கட கட என்று ஸ்வரங்களை ஒப்புவித்தான். அவனது அண்ணனுக்கே படு ஆச்சரியம்.

அதே வருடம் இன்னொரு நாள் ஏ வி மெய்யப்ப செட்டியார் தன நண்பர்களுடன் அமைத்திருந்த பிரகதி ஸ்டுடியோவில் நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நடித்த காளமேகம் படப் பாடலின் ஒலிப்பதிவு. முன்பு குறித்த ஹார்மோனிஸ்ட் அங்கும் பணியாற்றிக் கொண்டிருந்தார். உடன் அவரது தம்பியும் வந்திருந்தான். 

"இவன் என் தம்பி, என்ன பாடினாலும் ஸ்வரங்களை அப்படியே ஒப்பித்துவிடுவான்" என்று ராஜத்தினம் பிள்ளையிடம் கூறினார் அந்த ஹார்மோனிஸ்ட். "அப்படியா, எங்கே நான் வாசிப்பதன் ஸ்வரங்களை சொல் பார்க்கலாம்" என்று சொல்லி தனது நாதஸ்வரத்தில் தோடி ராகத்தை வாசித்தார். அந்த சிறுவன் ஒரு காகிதத்தில் அதன் ஸ்வரக்கோர்வையை அப்படியே எழுதி பிள்ளையிடம் தந்தான். அதைக் கண்ட பிள்ளை ஆசாரியத்துடன் " இவனுக்கு ஸ்வரக்குட்டி என்று பெயர் வையுங்கள். அபார ஞானம் உள்ளவன்" என்று அவனுக்கு ஒரு புதியதொரு பெயர் சூட்டினார்.

அந்த ஹார்மோனிஸ்ட்தான் பின்னாளில் ஏ வி எம்மின் ஆஸ்தான இசையமைப்பாளராக விளங்கிய ஆர் சுதர்சனம். அவரது தம்பிதான் ஆர் கோவர்த்தனம்.

ஏ வி எம்மின் திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் மும்முரமாக ஆர் சுதர்சனம் ஈடுபட்டிருந்ததால் அவரது தம்பியை செட்டியார் கிராமபோன் இசைக்குழுவிற்கு இசையமைப்பாளராக நியமித்தார் . ஆனால் 1953 ல் திரைப்படங்களுக்காக ஒளிப்பதிவு செய்த பாடல்களையே எடிட் செய்து இசைத்தட்டில் பதிவு செய்யும் முறை வந்து விட்டது. ஆகையால் தனியாக இன்னொருமுறை பதிவு செய்யும் முறை முடிவடைந்தது. ஆனால் கோவர்த்தனத்தை இழக்க செட்டியார் விரும்பவில்லை. அவரது அண்ணனுக்கு உதவியாக அவரை அமர்த்தினார். சில படங்கள் மிகவும் சீக்கிரமாக வெளிவர வேண்டிய சந்தர்ப்பங்களில் அண்ணனும் தம்பியுமாக ஆளுக்கொரு ரீலைப் பிரித்துக் கொண்டு பின்னணி இசையை செய்து முடிப்பார்களாம்.

ஏ வி எம்மின் தலைமை மேலாளராக இருந்த வாசுதேவ மேனன், தான் தயாரிக்கும் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை கோவர்த்தனத்திற்கு அளித்தார். பிரேம் நசீரை கதாநாயகனாக வைத்து "ஒரே வழி" என்ற படத்தில் "ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால், அவர் உள்ளங்கள் காண்பது ஒரே வழி" என்ற கண்ணதாசன் பாடலுக்கு கோவர்த்தனம் இசையமைத்தார். அவரது திறமையை உணர்ந்த மேனன், தனது அடுத்த படமான "கைராசி" படத்திலும் கோவர்த்தனத்தை இசையமைப்பாளராக ஆக்கினார். இதன் பாடல்களும் படமும் பெரிய வெற்றி.



அடுத்து "பட்டணத்தில் பூதம்" கண்ணதாசன் தயாரிக்கத் துவங்கி பின்னர் வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த படம். அந்தப் படப் பாடல்களும் பெரும் வெற்றி. 

"மெட்டுப் போட்டபின் பாடலை எழுத சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் இசையமைத்த பாடல்கள் அனைத்திற்கும் முதல் பாடல்தான் எழுதப் பட்டது. வார்த்தைகளுக்கு மெட்டுப் போட்டால்தான் பாடல் உணர்வுபூர்மாக இருக்கும். அதனால்தான் எனது பாடல்கள் வெற்றியடைந்தன" என்றுகூறுவார் கோவர்த்தனம். ஒரே ஒரு முறை மெட்டுப் போட்டுவிட்டு பாடலை எழுத வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். கஜல் பாணியில் ஒரு மெட்டுப் போட, அதற்கு கண்ணதாசனின் வரிகள் ஏற்றதாக அமையவில்லை. ஆனால் கண்ணதாசனின் பாடல் வரிகளின் சிறப்பை உணர்ந்த கோவர்த்தனம் தயாரிப்பாளரிடம், மெட்டை செமி கிளாசிகலாக மாற்ற அனுமதி பெற்று பிறகு வேறு மெட்டு அமைத்தார். அந்தப் பாடல்தான் "அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி"

"வாய்ப்புகளைத் தேடி நான் என்றும் அலைந்ததில்லை. என்னைத் தேடி வந்தவர்களுக்கு மட்டும் நான் இசையமைத்தேன்" என்று கூறுவார் கோவர்த்தனம். அதனால்தான் அவருக்கு படங்கள் குவியவில்லை. மாறாக இசையமைப்பாளர்கள் இவரது உதவியை நாடினார்கள். அதற்கு காரணம் அவருடைய அசாத்தியத் திறமை, அனைவருடனும் சுமுகமாகப் பழகும் எளிமை.

திரை இசை மேதை சுப்பராமன், சுதர்சனம் போன்றோரிடம் உதவியாளாராக இருந்த கோவர்த்தனம், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசைக்குழுவின் கண்டக்டராக இருந்திருக்கிறார். அவர்கள் இருவரும் பிரிந்த பின்னும், 1970 வரை விஸ்வநாதனிடம் பணிபுரிந்தார். பிறகு 1976 முதல் 90 வரை இளையராஜாவிடம் பணியாற்றினார். இறுதியாக தேவாவிடம் பணியாற்றினார். "தேவா ஒருவர்தான் என்னை மதித்து என்னுடைய சொல்படி நடக்கிறார்" என்பார் கோவர்த்தனம்.

50 ஆண்டுகளாக திரைப்பட இசையுடன் நேரடித் தொடர்பு உடைய கோவர்த்தனம் திரை இசை போக்குகளைக் குறித்து ஆழமான பார்வை உடையவர். ராமநாதன் கர்நாடக சங்கீதத்தை மக்கள் விரும்பும் வகையில் அளித்தார். எம் எஸ் விஸ்வநாதன் இந்துஸ்தானி இசையின் மேருகுகளைக் கூட்டினார். இளையாராஜாவின் இசை பாமரர்களும் ரசிக்கும்படியாக இருந்தது, பின்னர் கம்ப்யூட்டர் வந்தவுடன் அவரது இசையின் போக்கு மாறி விட்டது என்று கூறுகிறார் கோவர்த்தனம்.

இவர் இசையமைத்த படங்கள்:
ஒரே வழி -1959
கைராசி - 1960
பட்டணத்தில் பூதம் - 1967
பூவும் பொட்டும் - 1968
பொற்சிலை - 1968
அஞ்சல் பெட்டி - 1969
வரப்பிரசாதம் 1975

இவர் இசையில் பிரபலமான பாடல்கள்:
காத்திருந்தேன் காத்திருந்தேன் - கைராசி 
அன்புள்ள அத்தான் - கைராசி 
கண்ணும் கண்ணும் பேசியதும் - கைராசி 
காதல் என்னும் ஆற்றினிலே - கைராசி 
அந்த சிவகாமி மகனிடம் - பட்டணத்தில் பூதம் 
உலகத்தில் சிறந்தது எது - பட்டணத்தில் பூதம் 
நாதஸ்வர ஓசையிலே - பூவும் பொட்டும் 
உன்னழகைக் கண்டு கொண்டால் - பூவும் பொட்டும் 
எண்ணம் போல கண்ணன் வந்தான் - பூவும் பொட்டும் 
முதல் என்பது தொடக்கம் - பூவும் பொட்டும் 
பத்துப் பதினாறு முத்தம் - அஞ்சல் பெட்டி 520
அக்கரையில் அவனிருக்க இக்கரையில் நானிருக்க - பொற்சிலை
கங்கை நதியோரம் ராமன் நடந்தான் - வரப்பிரசாதம். 

இப்போது வயது முதிர்ந்த நிலையில், பல பொருளாதார பிரச்சினைகள் இருப்பினும் தனது சுயமரியாதையை சிறிதும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து வந்தார். 2017 செப்டம்பர் 8 ஆம் தேதி சேலத்தில் அவரது இல்லத்திலேயே காலமானார். இசைக்காகவே வாழ்ந்து மறைந்த அவரை நாம் நன்றியுடன் நினைவு கூர்வோம்.

நன்றி - திரு வாமனன் அவர்கள்.






No comments:

Post a Comment

குன்னக்குடி வைத்தியநாதன்.

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 16 : குன்னக்குடி வைத்தியநாதன். குன்னக்குடி வைத்யநாதனைப் பற்றி கூற வேண்டுமெனில்; "யாரையும் எ...